இறைவழி மருத்துவம்

இறைவழி மருத்துவம் என்பது மருந்து இல்லாத மருத்துவம். மருத்துவ உதவி தேவைப்படாத மருத்துவம். மருத்துவத்தை இரண்டு கூறாகப் பிரிக்கலாம். இயற்கை மருத்துவம், செயற்கை மருத்துவம். இயற்கையிலே உற்பத்தி ஆகக்கூடிய தானிய வகைகள், தாவர வகைகள், கீரை வகைகள், மர வகைகள் இன்னும் பூமியிலே காணப்படுகின்ற கல், மண் முதற்கொண்டு அனைத்தும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. செயற்கை மருத்துவத்தில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட, ரசாயனப் பொருட்களிலிருந்து மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இவையெல்லாம் தேவைதானா? உண்மையிலேயே இவைதான் நோய்களைக் குணப்படுத்துகின்றனவா? அல்லது இவற்றைச் சாப்பிட்டால் நோய் குணமாகும் என்று நம்புகிறாமோ, அந்த நம்பிக்கையால் நோய்கள் குணமாகின்றனவா? நாம் சிந்தித்துத் தெளிவடைய வேண்டியவர்களாக இருக்கிறோம்.
நாம் முதலாவதாக, நோய் என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டும். டயாபடீஸ் என்று சொல்கிறோம். கேன்சர் என்று சொல்கிறோம். இதைத்தான் நோய் என்று சொல்கிறோம். உண்மையில் டயாபடீஸ் என்பது நோயா? அல்லது அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதிகமாகத் தாகம் எடுப்பது, அதிகமாகப் பசி எடுப்பது, உடல் மெலிந்துபோவது அல்லது உடல் குண்டாவது, அரிப்பு ஏற்படுவது இவற்றைத்தானே நோய் என்று சொல்ல முடியும். அதாவது, உடலில் ஏற்படும் கஷ்டங்களைத்தானே நோய் என்று சொல்ல முடியும். அதற்கு டயாபடீஸ் என்று பெயரிட்டது யார்? கேன்சர் என்று ஒரு வார்த்தையைச் சொல்கிறோம். ஆனால், உண்மையில் வயிற்றில் ஒரு புண் ஏற்படுகிறது அல்லது மூளையில் உள்ள தசையில் சிதைவுகள் ஏற்பட்டு தசையில் ஆங்கங்கே கொப்புளங்கள் ஏற்படுகின்றன. இதைத்தான் நாம் நோய் என்று சொல்ல முடியும்.


வாயில் புண் வருகிறது என்றால், குடலும் ரத்தமும் மொத்த உடலும் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்று அர்த்தம். அதனால்தான் நாக்கில், வாயில் புண் ஏற்படுகிறது. வயிற்றில் புண் ஏற்படுகிறதே ஒழிய அது நாக்குக்கு மட்டுமே உண்டான நோய் அல்ல. தொடையில் சீழ் பிடித்த கட்டி வருகிறது என்றால், அது தொடையில் உண்டான நோய் அல்ல. உடம்பெல்லாம் கெட்டு, ரத்தமும் கெட்டுவிட்டதன் வெளிப்பாடாக தொடையில் சீழ்க்கட்டி உண்டாகிறது. ஆனால், ‘ஆப்செஸ் இன் தை’ அல்லது ‘தொடையில் சீழ்க்கட்டி’ என்று நோய்க்குப் பெயரிடும்போது, அதை தொடையில் மட்டும் ஏற்பட்ட நோயாகக் கருதிவிடுகிறோம். உதட்டில், கைகளில் வெண் குஷ்டம் ஏற்படுகிறது என்றால், உடல் கெட்டு, ரத்தமும் கெட்டுப்போனதால் வரக்கூடிய நோய் என்று நாம் கருதுவதில்லை. அதைத் தோல் நோயாகக் கருதிவிடுகிறோம்.

இதைப் படிக்கும் உங்களுக்கு, நோய் என்றால் என்னவென்று இப்போது ஓரளவுக்குப் புரியும் என்று நினைக்கிறேன். நோய்க்குப் பெயர் வைக்கக்கூடாது. எதற்காக நோய்க்குப் பெயர் வைக்கக்கூடாது என்றால், நாம் டயாபடீஸ் என்று பெயர் வைக்கும்போது, உடலில் சர்க்கரை அளவு கூடியிருக்கிறது என்ற எண்ணத்தைத்தான் தருகிறதே தவிர, நம் உடல் உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்ற எண்ணம் வருவதில்லை. இப்படி பெயர் வைப்பதால், நாம் வாழ்நாள் முழுவதும் எப்போது என்ன கஷ்டம் ஆரம்பித்ததோ, அது முதல் அந்தக் கஷ்டத்துடனேயே வாழ்ந்து, வாழ்நாள் முழுவதும் மருந்துகளைச் சாப்பிட்டு, கடைசியாக உடல் உறுப்புகளான கண்கள், கால்கள், சிறுநீரகங்களை இழக்கும் நிலைக்கு ஆளாகிறோம்.
 
சர்க்கரை, ரத்தக் கொதிப்பு நோய்க்காக எத்தனை ஆண்டுகள் மருந்து சாப்பிடுகிறார்கள். அவர்கள் இந்த மருந்தை நம்பிச் சாப்பிடுகிறார்கள். டாக்டரையும் நம்பிச் சாப்பிடுகிறார்கள். அதற்காக, சொற்ப காலம் சுகம் கிடைக்கிறது. ஆனால் முடிவு என்ன? சர்க்கரையும் ரத்தக் கொதிப்பும் குணமாகிவிட்டதா? மருந்துகளால் பணமும் போய்விடுகிறது. உடம்பும் போய்விடுகிறது. நீங்கள் மூலிகைகளையும், இயற்கை மருந்துகளையும் சாப்பிட்டாலும், சர்க்கரை நோயும், ரத்தக் கொதிப்பும் குணமாவதில்லை.

சர்க்கரை நோய்க்கு மருந்து சாப்பிடுகிறார்கள். ஏன் அந்தக் கஷ்டம் வந்திருக்கிறது என்பதற்கான காரணம் தெரியுமா? அல்லது யாராவது காரணம் சொல்ல முடியுமா? வயிற்றில் ஒரு புண் ஏற்பட்டிருக்கிறது. யாராவது காரணம் சொல்ல முடியுமா? சொத்தைப் பல் ஏற்பட்டிருக்கிறது. எதனால் சொத்தைப்பல் ஏற்பட்டிருக்கிறது, யாரும் உண்மையான காரணம் சொல்லமுடியாது. சிகரெட் பிடிப்பவர்களுக்கு, மது அருந்துபவர்களுக்கு வயிற்றில் புண் வரும் என்று சொல்லலாம். ஆனால் அந்தத் தனிப்பட்ட நபருக்கு வயிற்றில் ஏன் புண் வந்தது என்று சொல்ல முடியுமா? பரம்பரை நோய் காரணம் என்று சொல்லப்படுகிறது. இது சரியான காரணமாக இருக்க முடியுமா? எத்தனையோ பேருக்கு அவருடைய பரம்பரையிலேயே அந்த நோய் இல்லாமல் அவர்களுக்கு மாத்திரம் வந்திருக்கிறது. அதற்கு என்ன காரணம். ஏன் காய்ச்சல் வந்தது. காரணம் சொல்ல முடியுமா? இந்தக் காரணத்தைச் சொல்லாமல் காய்ச்சலுக்கு மருந்து கொடுக்கப்படுகிறது. அவ்வளவுதான்.
 
காய்ச்சல் வரும்போது, எதாவது ஒரு நோய் எதிர்ப்பு மருந்தை (ஆன்ட்டிபயாடிக்) எடுத்துக்கொள்கிறோம். கிருமிகளைக் கொல்கிறோமே தவிர, அந்தக் கிருமி நமது உடம்புக்குள் எப்படி வந்தது என்று சிந்தித்து ஆராய்வதில்லை. எனவே, மீண்டும் மீண்டும் அந்தக் கிருமியானது உடம்பைப் பிடித்துக்கொள்கிறது. அதனால், வாழ்நாள் முழுவதும் மருந்துகளைச் சாப்பிட்டு, கிருமிகளைக் கொல்கிறோம் என்ற நினைப்பில், இந்த உடலையே அழித்துவிடுகிறோம். நம் உடலிலே நமக்கு நன்மை செய்யக்கூடிய எத்தனையோ கிருமிகள் இருக்கின்றன. மருந்துகளால், அவற்றையும் சேர்த்து அழித்துவிடுகிறோம். நமக்கு நாமே அநியாயம் செய்துகொள்கிறோம்.
 
ஆக, உடலுக்குக் கெடுதல் செய்யும் மருந்துகள் இன்றி இந்த உலகில் ஆரோக்கியமாக வாழ்வது எப்படி என்பது பற்றி நாம் அடுத்து வரும் அத்தியாயங்களில் அறிந்துகொள்வோம்.
- டாக்டர் கனகசபாபதி 
நன்றி : தினமணி

No comments:

Post a Comment